கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பிரவீன் சூட்டுக்கு மீண்டும் சி.பி.ஐ. இயக்குநராக பதவி நீட்டிப்பு: அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயல் - செல்வப்பெருந்தகை

பா.ஜ.க. அரசை கண்டித்து தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மத்திய புலனாய்வுத்துறையின் இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர், மத்திய மந்திரி, எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் பங்கேற்று பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். ஆனால், தேர்வுக் குழுவிற்கு முழுமையான பட்டியலை அனுப்பாமல் 69 பெயர்கள் கொண்ட பட்டியல் பரிசீலனைக்கு வழங்கப்பட்டது. இதில் பிரவீன் சூட் என்பவரின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டுமென்பது பிரதமர் மோடியின் விருப்பமாகும்.

ஏற்கனவே, பிரவீன் சூட்டுக்கு இரண்டு ஆண்டு கால பதவிக்காலம் முடிந்து கடந்த மே 2025-ல் ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. மறுபடியும் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக எதிர்த்தார். ‘எனக்கு முழுமையான பட்டியல் தரப்படவில்லை. 69 பேர் கொண்ட பட்டியல் மட்டுமே வழங்கப்பட்டது. முழு விவரங்களும் எனக்கு தெரிவிக்கப்படாமல் பிரவீன்சூட்டை மீண்டும் பதவி நீட்டிப்பு செய்வது தேர்வுக் குழுவின் நடைமுறைக்கு எதிரானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்று மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அந்த எதிர்ப்பை புறக்கணித்து விட்டு பிரவீன் சூட்டுக்கு மீண்டும் ஓராண்டு சி.பி.ஐ. இயக்குநராக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலாகும்.

மத்திய புலனாய்வுத்துறையை மத்திய பா.ஜ.க.வின் கைப்பாவையாக வைத்துக் கொண்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மூலமாக எதிர்கட்சித் தலைவர்களை, பத்திரிகையாளர்களை, விமர்சனம் செய்பவர்களை அரசியல் ரீதியாக பல்வேறு பொய் வழக்குகளை புனைந்து சிறையில் அடைப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். பா.ஜ.க. அரசின் ஜனநாயக, சர்வாதிகார நடவடிக்கைளுக்கு சி.பி.ஐ. அமைப்பை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் தான் பிரவீன் சூட்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும். எதிர்கட்சிகள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை ஏவிவிடுவதற்கு துணை போகிற அமைப்பாக சி.பி.ஐ. அமைப்பை பயன்படுத்துகிற முயற்சியாக கருதி இதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

அதேபோல, நீட் தேர்வு முறையினால் அதிகமாக வஞ்சிக்கப்பட்டு வருபவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள். அதை எதிர்த்து சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற முடியாமல் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் 22 லட்சம் மாணவர்கள் கடந்த மே 3-ம் தேதி எழுதிய நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பல மாதங்களாக மாணவர்கள் தீவிரமாக படித்து, தங்களை தகுதிப்படுத்திக் கொண்டு தேர்வு எழுதிய பிறகு ரத்து செய்வது எந்தளவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதை நினைத்துப் பார்த்தாலே மிகுந்த வேதனையை தருகிறது.

நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே கசியவிடப்பட்டு மாணவர்கள் அதை அடிப்படையாகக் கொண்டு தேர்வு எழுதியிருக்கிறார்கள். வினாத்தாள் கசிவு உறுதி செய்யப்பட்டதும் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டு, தற்போது 15 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் மூலமாக நாடு முழுவதும் நீட் தேர்வை நடத்துவதில் தேசிய தேர்வு முகமை படுதோல்வியடைந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்ட பிறகும் நீட் தேர்வை நடத்த வக்கற்ற அரசாக பா.ஜ.க. இருந்து வருகிறது.

எனவே, நாடு முழுவதும் ஒரே நீட் தேர்வு நடத்தாமல் மருத்துவ, பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையை அந்தந்த மாநில அரசுகளின் உரிமைகளுக்கே விட வேண்டுமென நீண்டகாலமாக தலைவர் ராகுல்காந்தி உட்பட அனைவரும் கோரிக்கை விடுத்து வந்தார்கள். அதே கோரிக்கையை இன்றைக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய்யும் மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.

மத்திய பா.ஜ.க. அரசு, எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்காக சி.பி.ஐ. இயக்குநர் பிரவீன் சூட்டுக்கு வழங்கப்பட்ட ஓராண்டு பதவி நீட்டிப்பையும், நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசே தேர்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்க மறுக்கிற மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக நாளை (15.05.2026) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். சென்னையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.