கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

குழந்தை இறந்த துக்கத்தில் கர்ப்பிணி தற்கொலை

குழந்தை இறந்த துக்கத்தில் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள டி.ஆண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் திருமலை. இவரது மனைவி கலைச்செல்வி (28 வயது). இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கிரிஸ்மிதா (2 வயது) என்ற பெண் குழந்தை இருந்தது. கலைச்செல்வி தற்போது கர்ப்பமாக இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தது. குழந்தை இறந்த துக்கத்தில் கலைச்செல்வி இருந்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த கோட்டப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கலைச்செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குழந்தை இறந்த துக்கத்தில் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.