புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அவசர காலத்தில் துரிதமாக செயல்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு வாகனத்திலேயே பாதுகாப்பாக பிரசவம் பார்த்து மனிதநேயத்தை நிலைநாட்டியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி நிவானிதாவுக்கு திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உடனடியாக 108 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ், கர்ப்பிணியை ஏற்றிக்கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தது.
ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே நிவானிதாவுக்கு பிரசவ வலி மிகத் தீவிரமடைந்தது. வாகனத்தை மேற்கொண்டு ஓட்டினால் ஆபத்து என்பதை உணர்ந்த ஊழியர்கள், ஆம்புலன்ஸை வழியிலேயே பாதுகாப்பான ஒரு இடத்தில் நிறுத்தினர். தொடர்ந்து, மருத்துவ உதவியாளர் முத்துச் செல்வம் அவசரப் பிரசவம் பார்க்கும் பணிகளில் ஈடுபட்டார்.
ஓட்டுநர் பாலமுருகன் உரிய முறையில் தேவையான உதவிகளைச் செய்ய, மருத்துவ உதவியாளரின் சாதுரியமான மற்றும் பாதுகாப்பாக பிரசவம் பார்த்ததன் பயனாக நிவானிதாவுக்கு ஆம்புலன்ஸிலேயே அழகான பெண் குழந்தை சுகப்பிரசவமாகப் பிறந்தது.
பிரசவம் முடிந்ததைத் தொடர்ந்து, தாயும் சேயும் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தாயும் குழந்தையும் முழு ஆரோக்கியத்துடன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சரியான நேரத்தில் பதற்றமின்றி செயல்பட்டு, 2 உயிர்களைக் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் முத்துச் செல்வம் மற்றும் ஓட்டுநர் பாலமுருகன் ஆகிய இருவரின் அர்ப்பணிப்புமிக்க சேவைக்கு பொதுமக்களும் மருத்துவத்துறை அதிகாரிகளும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.