தமிழக செய்திகள்

2028 மகாமக விழா முன்னேற்பாடு: கும்பகோணத்தில் அமைச்சர் ரமேஷ் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

வடநாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளாவை போலவே தென்னகத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்படும் வரலாற்று சிறப்புமிக்க பெருவிழாவாகும்.

கும்பகோணம்,

2028 மகாமக விழா முன்னேற்பாடு காரணமாக கும்பகோணத்தில் அமைச்சர் ரமேஷ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கும்பகோணம் மகாமகம்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், 2028-ஆம் ஆண்டு நடைபெற உள்ள கும்பகோணம் மகாமகத்தினை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் முன்னிலையில், அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ரேவதி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா, தஞ்சாவூர் சட்ட மன்ற உறுப்பினர் விஜய்சரவணன். கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஜெயராமன், மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோவன், மாநகராட்சி ஆணையர் சுதா உதவி ஆட்சியர் (பயிற்சி) சுபாஷ் கார்த்திக், ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

இக்கூட்டத்தில் இந்து சமய அறிநிலையத்துறை அமைச்சர் தெரிவித்தாவது:-

ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிற்கிணங்க, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், கும்பகோணம் நகரில் 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மகாமகம் திருவிழாவினை முன்னிட்டு, சைவ மற்றும் வைணவ திருக்கோயில்களில் தேரோட்டங்கள், ஓலைச்சப்பரம், சுவாமி வீதியுலா, தெப்பம் மற்றும் மகாமக குளம், காவிரி ஆற்றில் தீர்த்த வாரி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருவிழா சிறப்புற நடைபெற அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

ஆய்வு

மேலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத்துறை, கும்பகோணம் மாநகராட்சி, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, போக்குவரத்து துறை, உணவு பாதுகாப்புத்துறை, மின்சார வாரியம் மற்றும் பகிர்மானக் கழகம் போன்ற பல்வேறு துறைகள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், 2028 மகாமகம் முன்னேற்பாடுகள் தொடர்பாக நிலுவையிலுள்ள பணிகள் அனைத்தும் விரைவாக முடித்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் திருமலை, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன், துணை ஆணையர்கள் உமாதேவி, ராணி, உதவி ஆணையர்கள் ஹம்சன், அஸ்வினி, கும்பகோணம் வட்டாட்சியர் பூங்கொடி மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT