குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு வருகிற 10-ந் தேதி காளி பூஜையும், இரவு காப்பு கட்டுதல் நடைபெறுகிறது. 11-ந் தேதி திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. அன்று முதல் மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருகாப்பு அணிந்து வேடம் தரித்து ஊர், ஊராக சென்று காணிக்கை பிரிக்க புறப்படுவர். தொடர்ந்து வேடம் அணியும் பக்தர்கள் ஆங்காங்கே கிராமங்களிலும், கோவில் கடற்கரை வளாகத்திலும் குடில் அமைத்து தங்கி காணிக்கை பிரித்து குடில் அமைத்து தங்கி விரதம் மேற்கொள்வர்.
வரும் 20-ந்தேதி 10-ஆம் தசரா அன்று கோவிலில் வேடம் அணிந்து விரதம் மேற்கொண்டு வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோவில் உண்டியலில் செலுத்துவார்கள். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரை வளாகத்தில் மகிசாசூரசம்காரம் நடைபெறுகிறது. இதில் வெளிநாடுகள், பல்வேறு மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்துவர்.
மறுநாள்(21-ந்தேதி) அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடைக்கு எழுந்தருளும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பு எழுந்தருளி சாந்த அபிஷேக ஆராதனைகளுடன் அம்மன் கோவில் கலையரங்கம் சென்றடைவார். காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். மாலையில் அம்மன் கோவில் வந்த டைந்த உடன் கொடி இறக்கம் செய்யப்பட்டு காப்பு களைதல், நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறுகிறது.
தசரா திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருக்கோவில் வளாகம், கடற்கரை மற்றும் புறவழிச் சாலை உள்ளிட்ட இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பந்தல்கள், தற்காலிக மற்றும் நிரந்தர சுகாதார வளாகங்கள் அமைக்கப்படுகின்றன., குலசேகரன்பட்டினம் அறம்வளர்த்த நாயகிஅம்மன் கோவில் அருகே திருச்செந்தூர், தூத்துக்குடி மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்கு தற்காலிக பஸ்நிறுத்தமும், தீதத்தாபுரம் சாலை அருகே நாகர்கோவில் மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்காக தற்காலிக பஸ் நிறுத்தமும், கொட்டங்காடு சாலையில் உடன்குடி, திசையன்விளை, வள்ளியூர்மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்காக தற்காலிக பேருந்து நிறுத்தமும் அமைக்கப்படுகிறது.
மேலும், 250 ஏக்கர் பரப்பளவில் 3 இடங்களில்இரு சக்கர வாகன நிறுத்தங்கள், 19 இடங்களில் நான்கு சக்கர வாகன நிறுத் தங்கள், பக்தர்கள் தரிசனத்துக்கு கூடுதல் வரிசைப்பாதை, கண்காணிப்பு கேம ராக்கள் மூலம் புறக்காவல்நிலையத்தில் இருந்தவாறு கண்காணிக்கும் வசதி, ஹெலி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.