தூத்துக்குடி,
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழா வருகிற 26ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், முன்னேற்பாடுகள் தொடர்பாக, அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தலைமை தாங்கினார். கலெக்டர் விஷூ மகாஜன், மாவட்டக் எஸ்.பி. அபிஷேக் குப்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பனிமய மாதா கோவில் திருவிழா வரும் ஜூலை 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆகஸ்ட் 2-ம் தேதி நற்கருணை பவனியும், ஆகஸ்ட் 5-ம் தேதி நகர வீதிகளில் மாதா சப்பர பவனியும் நடைபெற உள்ளன. திருவிழா காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய உள்கட்டமைப்பு மற்றும் பொது சுகாதாரப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தற்காலிக சுகாதார வளாகங்கள் அமைத்தல், கூடுதல் பணியாளர்களைக் கொண்டு துப்புரவு மற்றும் குளோரினேஷன் பணிகளை மேற்கொள்ளுதல், தெருவிளக்குகளைப் பராமரித்தல் மற்றும் சேதமடைந்த சாலைகளைச் சீரமைத்தல், பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க தேவையான இடங்களில் தற்காலிக தொட்டிகளை அமைத்தல், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களிலிருந்து பனிமய மாதா தேவாலயம் வழியாக கூடுதல் உள்ளூர் பேருந்துகளை இயக்குதல், தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய பகுதி வாரியாக ஒயர்மேன்களை நியமித்துக் கண்காணித்தல், தேவையான மருந்துகள், உபகரணங்களுடன் கூடிய மருத்துவ முகாம்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்துதல் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்களைத் தயார் நிலையில் வைத்திருத்தல், காவல் துறை சார்பில் திருவிழா நடைபெறும் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் அமைத்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்றுப் பாதைகளை திட்டமிடவும், தற்காலிக வாகனக் காப்பகங்களை ஏற்படுத்தவும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தின்போது, "தூத்துக்குடி அருகே அமையவுள்ள கப்பல் கட்டும் தளம் குறித்த பல்வேறு கட்ட ஆய்வுப் பணிகள் நடந்து வருவதாகவும், அவை நிறைவடைந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும்" என்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 34 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை அமைச்சர் ஸ்ரீநாத் வழங்கினார். மேலும் அவர் பனிமய மாதா ஆலயத்திற்கு நேரில் சென்று அங்கு நடைபெற்று வரும் விழா முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்புலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, உதவி கலெக்டர் பிரபு, பயிற்சி உதவி ஆட்சியர் பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், பேராலய பங்குத்தந்தை ஜான்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.