தமிழக செய்திகள்

முந்தைய ஒப்பந்தங்கள் ரத்து... யூனிட்டுக்கு ரூ.35 செலவிடுவது ஏன்? - பழனிவேல் தியாகராஜன் கேள்வி

இதற்குமுன்பு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20 முதல் ரூ.30 வரை விலை கொடுத்து வாங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

சென்னை,

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்வெட்டு இருந்து வருகிறது. தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் அதிகமாக மின்தடை ஏற்படுகிறது. இதனால், ஆங்காங்கே பொது மக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி விட்டது. உச்சக்கட்டமாக தலைமைச்செயலகத்திலேயே மின்வெட்டு ஏற்பட்டு, அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் அறைகளே இருளில் மூழ்கியுள்ளது.

காற்றும் இல்லாததால் காற்றாலை மின்சாரமும் அரசுக்கு கைக்கொடுக்க வில்லை. மின் தேவையை கருத்தில் கொண்டு, மின் தேவை உச்சத்தில் இருக்கும் நேரங்களில் அரசு வெளிச்சந்தையில் இருந்தே மின்சாரத்தைக் கொள்முதல் செய்து சமாளித்து வருகிறது.

கொள்முதல் டெண்டர்

இதன் ஒரு பகுதியாக, மின்தேவையை முழுமையாக சமாளிக்கும் பொருட்டு, வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட் மின்சாரத்தை அவசரகால அடிப்படையில் கொள்முதல் செய்ய கடந்த வாரம் தமிழ்நாடு மின் வினியோகக் கழகம் சார்பில் டெண்டர் கோரப்பட்டது.

அந்த டெண்டரில், '12-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலான காலத்திற்கு, காலை உச்ச நேரங்களில் 1,500 மெகாவாட் மற்றும் மாலை உச்ச நேரங்களில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை அவசரகால அடிப்படையில் கொள்முதல் செய்ய டெண்டர் கோருகிறது' என்று கூறியிருந்தது.

இந்த டெண்டரின் அடிப்படையில், தனியார் நிறுவனங்கள் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.37 ரூபாய் வரை விற்பனை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்து விண்ணப்பித்திருந்தன.

இதற்கிடையே, இறுதியாக ஒரு யூனிட் மின்சாரத்தை வெளிசந்தையில் இருந்து 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய செய்யும் வகையில் டெண்டரை மின்வாரியம் இறுதி செய்து ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, மின்தடை ஓரளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்குமுன்பு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20 முதல் ரூ.30 வரை விலை கொடுத்து வாங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. இது தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

நிர்வாகத்தில் மிகப்பெரிய தோல்வி

முன்பு மிகவும் குறைந்த விலையில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, தற்போது ஒரு யூனிட்டுக்கு ரூ.35 என்ற விலையில் கொள்முதல் செய்வது நிர்வாகம் மற்றும் திட்டமிடலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தோல்வியா? அல்லது மிகப்பெரிய ஊழலா? இரண்டுமே இருக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT