தமிழக செய்திகள்

முன்விரோதம்: ஏர்வாடியில் 3 பேரை கத்தியால் தாக்கிய ஒருவர் கைது

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி, திருவரங்கனேரி கிராமத்தில் இருசக்கர வாகனங்களில் வந்த நபர்கள், 3 பேரைக் கத்தியால் தாக்கினர்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பகுதியில் முன்விரோதம் காரணமாக 3 பேர் மீது கத்தியால் தாக்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவரங்கனேரி கிராமத்தில் நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில், இருசக்கர வாகனங்களில் வந்த நபர்கள் 3 பேரைக் கத்தியால் தாக்கினர்.

முன்விரோதம்

திருவரங்கனேரியைச் சேர்ந்த இசைராஜா என்பவருக்கும், வன்னியன்குடியிருப்பைச் சேர்ந்த சில நபர்களுக்கும் இடையே நிலவி வந்த முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

3 பேர் மீது கத்தியால் தாக்குதல்

சம்பவத்தன்று இசைராஜாவைத் தேடி வந்த நபர்கள், அவர் அங்கு இல்லாததால், அவரது மாமா பெருமாள்(50), மனோகரன்(40) மற்றும் சண்முகவேல்(60) ஆகிய 3 பேரை கத்தியால் தாக்கியுள்ளனர்.

லேசான காயங்கள்

இந்த தாக்குதலில் பெருமாளுக்கு இடது நெற்றியிலும், இடது காதின் அருகிலும் லேசான கீறல் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மேலும் மனோகரனுக்கு தலையில் லேசான கீறல் காயங்களும், இடது தோள்பட்டை பகுதிகளில் காயங்களும் ஏற்பட்டன. சண்முகவேலுக்கு இடது தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

ஒருவர் கைது

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த நாங்குநேரி டி.எஸ்.பி. மற்றும் ஏர்வாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஏர்வாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, சுரேந்தர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT