தமிழக செய்திகள்

நெல் குவிண்டால் ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500 விலை அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் கருத்து

தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை,

நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை

தமிழக சட்டசபையில் விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், சன்னரக நெல்லுக்கு மாநில அரசின் ஊக்கத்தொகை குவிண்டாலுக்கு ரூ.289 ஆகவும், பொது ரக நெல்லுக்கு ரூ.159 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,750-க்கும். பொது ரக நெல் ரூ.2,600-க்கும் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 2025-26 கரும்பு அரவை பருவத்தில் மத்திய அரசு நிர்ணயித்துள்ள டன்னுக்கு ரூ.3,290.50 விலையுடன் தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.709.50 வழங்கப்படுவதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.4,000 கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் சங்கம் வரவேற்பு

இது குறித்து விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு-

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன்:- தமிழக அரசு நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கியதை வரவேற்கிறோம். கடந்த ஆண்டு சன்னரக நெல்லுக்கு வழங்கப்பட்ட ரூ.156 ஊக்கத்தொகை தற்போது ரூ.289 ஆக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

உரம் மற்றும் வேளாண் இடுபொருட்களின் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு காரணமாக உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையில் இந்த உயர்வு விவசாயிகளுக்கு ஓரளவு உதவியாக இருக்கும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்துள்ள தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதியின்படி மேலும் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

திருப்தி இல்லை

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முகமது இப்ராஹிம்:- தமிழக அரசின் தற்போதைய அறிவிப்பு விவசாயிகளுக்கு முழுமையான திருப்தியை அளிக்கவில்லை. இது விவசாயிகள் மத்தியில் மிகுந்த மன வேதனையை தருகிறது. ஏமாற்றத்தை தருகிறது. தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500-ம், கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500-ம் வழங்க வேண்டும்.

எனவே, தற்போதைய விலை அறிவிப்பை மறுபரிசீலனை செய்து உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயிகள் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சாகுபடி மேற்கொண்டு வருவதால், உற்பத்திச் செலவு மற்றும் கடன் சுமையை கருத்தில் கொண்டு அரசு கூடுதல் விலை வழங்க வேண்டும்.

வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்

தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமல்நாதன்:- கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங் கப்படும் என்ற அறிவிப்பு சற்று ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும், தேர்தல் வாக்குறுதியான ரூ.4,500-ஐ வழங்க வேண்டும். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500 வழங்கப்படும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு தற்போதைய ரூ.2,750 மற்றும் ரூ.2,600 விலை அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது.

சன்னரகம், பொது ரகம் என விலை வேறுபாடு இல்லாமல் ஒரே கொள்முதல் விலையாக குவிண்டாலுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும். அரசு நிதிச்சுமையை கருத்தில் கொண் டால், குறைந்தபட்சம் இந்த ஆண்டுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,100 வழங்கி, மீதமுள்ள தொகையை அடுத்த ஆண்டு வழங்குவதாக சட்டசபையில் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

கூடுதல் கோரிக்கை

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன்:-நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஓராண்டில் நெல்லுக்கான மாநில அரசின் ஊக்கத்தொகை ரூ.156 வரை உயர்த்தப்பட்டிருப்பது முக்கியமான நடவடிக்கை. கரும்பு டன்னுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுவதன் மூலம் ரூ.4,000 கிடைப்பதும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இருப்பினும், த.வெ.க. தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500-ம், கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500-ம் வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தேர்தல் காலத்தில் அறிவிக்கப்பட்ட விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடியை விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.