தமிழக செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பருப்பு வகைகளின் விலை மேலும் உயர வாய்ப்பு

வறட்சி காரணமாக துவரை சாகுபடி குறைந்துள்ள நிலையில் விலை அதிகரித்து வருகிறது.

சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பருப்பு வகைகளின் விலை மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பருப்பு வகைகள்

தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து தரப்பு மக்களாலும் தங்களது அன்றாட உணவு வகைகளில் முக்கிய பொருளாக பயன்படுத்துவது பருப்பு வகைகளாகும். குறிப்பாக துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவை ஏதாவது ஒரு உணவுவகையில் சேர்க்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பருப்பு வகைகளின் விலை உயர்ந்து வருகிறது. மாநிலம் முழுவதும் 3 கோடியே 15 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ஒரு கிலோ துவரம் பருப்பு வினியோகிப்பதற்கு 31 ஆயிரம் டன் துவரம் பருப்பு தேவைப்படும்.

தமிழகத்தில் தேனி, உசிலம்பட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் துவரை சாகுபடி செய்யப்படுகிறது. கூடுதல் தேவைக்கு மராட்டியம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்து துவரம் பருப்பு கொண்டு வரப்படுகிறது. அந்த மாநிலங்களிலும் வறட்சி காரணமாக துவரை சாகுபடி குறைந்துள்ள நிலையில் விலை அதிகரித்து வருகிறது.

விலை உயர்வு

இதுகுறித்து விருதுநகர் வியாபார சங்க செயலாளர் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாக துவரை, பாசிப்பயறு, உளுந்து ஆகியவற்றின் வரத்து குறைவாக உள்ளதால் பருப்பு வகைகளின் விலை அதிகரித்து வருகிறது. மேலும் பருப்பு வணிகர்களிட மும் இருப்பு இல்லாத நிலை உள்ளது. மத்திய அரசு 44 சதவீதம் துவரை இறக்குமதியை அதிகரித்த போதிலும் அது மசூர் பருப்பாகவே உள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேவை அதிகரித்ததால் பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது துவரம் பருப்பு கிலோ ரூ.130 இருந்து ரூ.155 ஆகவும், பாசிப்பருப்பு ரூ.105 இருந்து ரூ.120 ஆகவும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.135 இருந்து ரூ.150 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. அதிக தேவை காரணமாக இன்னும் விலை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT