தூத்துக்குடி,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சாதாரண உடையில் முககவசம் அணிந்து திடீர் ஆய்வு செய்தார். இதன்படி கோவில் வளாகம், அன்னதானம் கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், தரிசன வரிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்தார். பின்னர் பக்தருடன் சேர்ந்து அன்னதானம் சாப்பிட்டு அன்னதான உணவின் தரம் குறித்தும் பக்தர்களிடம் கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து தரிசன வரிசையில் ஆய்வு செய்தபோது அமைச்சர் என்று தெரியாமல் அர்ச்சகர் ஒருவர் விரைவாக தரிசனம் செய்ய தலா ரூ. 1,000 என 4 பேருக்கு ரூபாய் 4,000 கேட்டுள்ளார். அதற்கு அமைச்சர் கையில் பணம் இல்லை என்று சொல்லியதால் ஜிபேயில் அனுப்புங்கள் என்று அந்த அர்ச்சகர் கேட்டு பெற்றுள்ளார். இந்த விவகாரத்தில், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் ரமேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விரைவு தரிசனத்திற்காக பணம் பெற்ற அர்ச்சகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், அர்ச்சகருடன் சேர்ந்து முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த 2 ராணுவ வீரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல, முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் பணம் கேட்ட 2 பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணி சுவாமி திருக்கோவிலில் இன்று (29.06.2026) ஆய்வு மேற்கொண்டதில் திருக்கோயிலின் சண்முக விலாசம் முகப்பில் பாதுகாப்பு பணிபுரியும் முன்னாள் ராணுவத்தினர் கருப்பசாமி மற்றும் தோப்பு ஆகியோர் திருக்கோவில் திரிசுதந்திரரிடம் பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாக பக்தர்களை அனுமதித்தது தெரியவந்தது எனவே உள்துறையில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர்கள் இரண்டு நபர்கள் பாதுகாப்பு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது
இனி வரும் காலங்களில் மேற்குறிப்பிட்ட முன்னாள் ராணுவ வீரர்களை அத்திருக்கோவிலில் எவ்விதப்பணிக்கும் அனுமதிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.