தமிழக செய்திகள்

‘பயங்கரவாதத்தை ஒடுக்குவதுதான் நமது தலையாய கடமை என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்’ - நயினார் நாகேந்திரன்

பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் விளக்கிக் கூறினார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிரதமர் மோடி இன்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய முக்கிய விஷயங்கள் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“பயங்கரவாதத்திற்கு எதிராக ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை'(Zero Tolerance) கொள்கையை கடைபிடிக்கிறது பாரதம்! "மனதின் குரல்" நிகழ்ச்சியின் இன்றைய 138-வது அத்தியாயத்தில் பாலகோட் வான்வழித் தாக்குதல் முதல் ஆபரேஷன் சிந்தூர் வரை, பயங்கரவாதத்திற்கு எதிராக நமது பாரதம் முன்னெடுத்த வலிமையான நடவடிக்கைகள் குறித்து விளக்கிக் கூறினார் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.

மேலும், பயங்கரவாதம் எந்த உருவில் ஊடுருவினாலும் அதை ஒடுக்குவதுதான் நமது தலையாய கடமை என்பதை மீண்டுமொரு முறை மக்களிடையே வலியுறுத்தியதோடு, 9/11 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து இன்றுடன் 25 ஆண்டுகள் முடிவடையும் நிலையில், அத்தாக்குதல்களில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அதுமட்டுமன்றி, நமது தேசத்தின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த மறைந்த விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கலின் 100-வது பிறந்தநாளான இன்று, அன்னாருக்கு இதயப்பூர்வமான புகழஞ்சலி செலுத்தினர் நமது பாரதப் பிரதமர்.

அடுத்ததாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நம் அனைவரின் தேசியப் பொறுப்பு என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான விவரங்களை மொபைல் மூலமாகவே மக்கள் எளிதாக பதிவு செய்யும் வகையில் மொத்தம் 16 மொழிகளில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்பதையும் குறிப்பிட்டு பேசினார்.

பின்பு, போதைப் பொருளுக்கு எதிராக துவங்கப்பட்ட ‘நஷா முக்த் யுவா அபியான்’ என்ற பிரச்சாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி, போதை எனும் கொடிய அரக்கனின் கரங்களில் இருந்து இன்றைய தலைமுறையை வெளிக்கொண்டு வர வேண்டுமென உறுதிமொழி கூறினார்.

இன்றைய மனதின் குரல் நிகழ்வின் மிக முக்கிய அங்கமே, நமது பழம்பெருமை வாய்ந்த சிலைகளையும் கோவில்களையும் கண்டறியும் வகையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள கல்லூரி ஒன்றின் தமிழ்த் துறையை சார்ந்த செல்வராஜு முன்னெடுத்து வரும் ஆய்வுகள் குறித்து பிரதமர் மோடி பெருமையுடன் குறிப்பிட்டு பேசியதுதான்.

பழங்காலத்தைச் சேர்ந்த ஆன்மீக அடையாளங்களை கண்டறிந்து வரும் செல்வராஜூ இந்த முயற்சிகள் மூலம், நமது பழம்பெருமை வாய்ந்த பண்பாட்டு கலாசாரப் பெருமைகள் மக்கள் மத்தியில் மேலும் உயிர்ப்புடன் இருக்கும் என்பதை உணர்வுப்பூர்வமாக பிரதமர் மோடி எடுத்துக் கூறினார்.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT