தமிழக செய்திகள்

ஜலகண்டேஸ்வரா் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப் பயிற்சி மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

சென்னை,

தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். அவர் இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக இன்று காலை 10.58 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.

விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்று வரவேற்றார். அதனை தொடர்ந்து அமைச்சர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து ரூ.750 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரெயில் வழித்தடத்தை முதல்-அமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்து போரூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பூந்தமல்லி மெட்ரோ ரெயில் நிலையம் வரை பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் விஜய்யும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.

அதனை தொடர்ந்து பிரதமர் மோடி சென்னை ஐ.ஐ.டி. வளாகத்துக்கு சென்றார். அங்கு உள்ளஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய்யும் உடனிருந்தார். பின்னர் ஐ.ஐ.டி.யில் உள்ள மூளை ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட்டு வருகிறார்.

இதைத்தொடர்ந்து, ஐ.ஐ.டி. வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார்.

முன்னதாக, ஐ.ஐ.டி. வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப் பயிற்சி மையத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

SCROLL FOR NEXT