தமிழக செய்திகள்

பிரதமர் மோடி நாளை மதுரை வருகை.. டிரோன்கள் பறக்க தடை

தமிழகத்தில் புதுப்பிக்கப்பட்ட ரெயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

மதுரை,

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் மதுராந்தகத்தில் ஜனவரி மாதம் நடைபெற்றது. தற்போது 2-வது கட்டமாக வருகிற 1-ந் தேதி புதுச்சேரி, மதுரை என 2 இடங்களில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

இதற்காக இன்று (28-ந் தேதி) இரவு டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி கவர்னர் மாளிகையில் தங்குகிறார்.

நாளை (1-ந் தேதி) காலை புதுச்சேரியில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி சிறப்புரையாற்றுகிறார். அதனை முடித்து கொண்டு ஹெலிகாப்டர் மூலம் தஞ்சாவூர் விமானப்படை தளத்திற்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த பின் சிறப்பு விமானம் மூலம் மதுரைக்கு புறப்படுகிறார்.

மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வரவேற்பு அளிக்கின்றனர். அதனை தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வான் கட்டுப்பாட்டு கோபுரத்தை திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து காணொலி காட்சி மூலம் தமிழகத்தில் புதுப்பிக்கப்பட்ட ரெயில் நிலையங்களை திறந்து வைக்கிறார்.

பரமக்குடி-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.பின்னர் கார் மாலை 4 மணிக்கு முருகப் பெருமானின் அறுபடை வீடான முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்கிறார். அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு கும்பம் மரியாதை அளிக்கப்படுகிறது.

அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு 4.30 மணிக்கு மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி தலைமையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறர்கள். இதற்காக 120 ஏக்கர் இடத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி மற்றும் பிரதமர் மோடி செல்லும் பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. விமான நிலையம், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை மாவட்ட எல்லைக்குள் நாளை டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடும்நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரவீன்குமார் எச்சரித்துள்ளார்.

SCROLL FOR NEXT