சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்னும் ஆன்றோர் மொழியைத் தாரக மந்திரமாகக் கொண்டு, கடந்த 12 ஆண்டுகளாக இந்தியத் திருநாட்டை ஆரோக்கியப் பாதையில் வீறுநடை போடச் செய்து வருகிறார் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.
ஒரு ஏழைக் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மருத்துவச் செலவுகள் சிதைத்துவிடக் கூடாது என்பதில் பிரதமர் காட்டிய அக்கறையில் உருவானதே 'ஆயுஷ்மான் பாரத்' என்னும் காப்பீட்டு திட்டம். இது ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்து, அறுவை சிகிச்சையையும் கட்டணமில்லாச் சேவையாக மாற்றி, ஒரு பாதுகாப்புக் கவசமாய் அவர்களைக் காத்து நிற்கிறது. அண்மையில், நமது முதியோர்களின் கண்ணியம் காக்க 'ஆயுஷ்மான் வய வந்தனா' திட்டத்தை விரிவுபடுத்தியதும், 'மக்கள் மருந்தகம்' மூலம் தரமான மருந்துகளைக் குறைந்த விலையில் வழங்கி சாமானியர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைத்ததும், நமது பிரதமர் மோடி மக்கள் மீது கொண்டுள்ள அளப்பரிய அக்கறைக்குச் சான்றாகும்.
'ஆயுஷ்’ எனும் மரபுசார் மருத்துவமும், ‘இ-சஞ்சீவனி’ எனும் நவீனத் தொழில்நுட்ப மின்னணுச் சேவையும் கைகோர்த்து, பாரதத்தின் மூலைமுடுக்கெல்லாம் இன்று நலம் பயக்கின்றன. 'தூய்மையே சேவை' என்ற அறத்தோடு பரவிய தூய்மை பாரத இயக்கமும், கவசம் போன்ற தடுப்பூசித் திட்டமும் பிணிகளற்ற ஒரு ஆரோக்கியச் சமூகத்தைப் படைத்து வருகின்றன.
இவ்வாறு, பிணியற்ற உடலும், துணிவு மிக்க மனமும் கொண்ட ஒரு புதிய தலைமுறையை நமது பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கி வருகிறார். இந்த ஆரோக்கியப் புரட்சியை மக்கள் இயக்கமாக மாற்றி, வல்லரசு இந்தியாவை நோக்கி நாம் வீறுநடை போடுவோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.