சென்னை,
சவால்களை தகர்த்த பிரதமர் மோடியின் ராஜதந்திரம்: பொருளாதார வளர்ச்சியில் புதிய சகாப்தம் படைக்கும் பாரதம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8% என்ற மகத்தான ஜிடிபி வளர்ச்சியை இந்தியா எட்டியிருப்பது ஒரு வரலாற்று சாதனையாகும். நமது பாரத நாடு படைத்துள்ள இந்த அசுர வளர்ச்சி, பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வைக்கும், நமது நாட்டின் வலிமையான பொருளாதார அடிப்படைகளுக்கும் சான்றாகும்.
சர்வதேச அளவில் நிலவும் புவிசார் அரசியல் குழப்பங்கள், எண்ணெய் விலை உயர்வு என பல உலகளாவிய சவால்களை நாம் எதிர்கொண்ட போதிலும், நமது பிரதமர் மோடியின் ராஜதந்திர நடவடிக்கைகளும், 140 கோடி மக்களின் கூட்டு முயற்சியும் இணைந்து இந்த சவால்களை தகர்த்தெறிந்து, நாட்டை அசுர வேகத்தில் வளர்ச்சி பாதையில் அழைத்து சென்றுள்ளன. இது ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்ள வேண்டிய தருணமாகும்.
இந்தியா முன்னேறாது என்று அவநம்பிக்கையை விதைத்தவர்களின் கணிப்புகள் மீண்டும் பொய்த்து போயுள்ளன. சவால்களை சாதனைகளாக மாற்றி, பாரதத்தின் பொருளாதாரத்தை உலக அரங்கில் அசைக்க முடியாத சக்தியாக உயர்த்தும் நமது பயணம் எப்போதும் தொடரும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.