சென்னை
தமிழக முதல்-அமைச்சர் விஜய், பிரதமர் பதவிக்கான தேர்வில் 3-வது இடத்தில் உள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், முதல் முறையாக தேர்தலில் களம் கண்ட விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளை வென்று முதல் இடம் பிடித்தது. அக்கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கடந்த முறை ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. கூட்டணி 73 தொகுதிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்திற்கு சென்றதோடு, அ.தி.மு.க. கூட்டணி 53 தொகுதிகளில் வெற்றி பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இதனால், ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாத போதிலும் அதிக தொகுதிகளை வென்ற த.வெ.க.வுடன் காங்கிரஸ் கைகோர்த்தது. தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி, த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து, வி.சி.க., 2 கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்தது. மே 10-ந்தேதி முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார்.
சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் த.வெ.க. வெற்றி பெற்றது. பின்னர் அக்கட்சியின் முதல் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் ஆகியவையும் தாக்கல் செய்யப்பட்டது. ஆட்சி பொறுப்புக்கு வந்து 100 நாட்கள் ஆன சூழலில், இதுதொடர்பான சாதனை விளக்க பொதுக்கூட்டங்களை த.வெ.க. நடத்தி வருகிறது.
இந்த நிலையில், 2029-ம் ஆண்டு பொது தேர்தலின்போது, மக்களின் பிரதமர் தேர்வாக யார் இருப்பார்? என்று இந்தியா டுடே மற்றும் சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில், நரேந்திர மோடி 48.7 சதவீதம், ராகுல் காந்தி 27.1 சதவீதம், ஜோசப் விஜய் 9.2 சதவீதம், என முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி (2 சதவீதம்), சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் (1.7 சதவீதம்), கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளரான அபிஜீத் திப்கே (1.3 சதவீதம்), ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் (1.2 சதவீதம்) ஆகியோரை விட விஜய் முன்னிலையில் இருக்கிறார்.
இதனால் கருத்துக்கணிப்பின்படி, அதிக சதவீத ஆதரவுடன் பிரதமராக மோடி தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி 2-வது இடத்தில் உள்ளார். தேசிய அளவிலான 3-வது இடத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் உள்ளார்.
த.வெ.க. ஆட்சியை பிடித்து 3 மாதங்களே ஆகியுள்ளன. இந்த நிலையில் இன்றைய முதல்-அமைச்சர், நாளைய பிரதமர் என்று கடந்த சில தினங்களாக அமைச்சர்கள் கூறிவரும் நிலையில் இந்த கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
சமீப நாட்களாக அடுத்த பிரதமர் முதல்-அமைச்சர் விஜய் என த.வெ.க.வினர் பேசி வருவது, த.வெ.க.வுடன் கூட்டணியில் உள்ள காங்கிரசாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என தெரிகிறது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் த.வெ.க.வினர் ரசிகர் மன்ற மனநிலையில் இருக்கின்றனர் என விமர்சித்துள்ளார். மேலும் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று உறுதியாக கூறினார்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் முதல்-அமைச்சர் விஜய்யை வாழ்த்தி, அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த சுதாகர் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அந்த போஸ்டரில், 'இன்றைய முதல்வர், நாளைய பிரதமர் விஜய்' என்றும், தூத்துக்குடி மத்திய மாவட்ட த.வெ.க. என்றும் எழுதப்பட்டு உள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த பிரதமர்
சட்டசபையில், தமிழக மனிதவள மேலாண்மை அமைச்சர் சரத்குமார் கடந்த 18-ந்தேதி பேசும்போது, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் பணிகளை பாராட்டி பேசினார். அடுத்த பிரதமராக நீங்கள் வருவீர்கள். பகலிரவு பார்க்காமல் உழைத்து வருகிறீர்கள். அதனால், நிச்சயம் நீங்கள் அடுத்த பிரதமராக வருவீர்கள் என்றார்.
அதற்கு ஒரு நாள் முன்பு பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, வருங்காலத்தில் தெற்கில் இருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும். அந்த தலைவர் தமிழகத்தில் இருந்து வரவேண்டும் என்று கூறினார். அந்த தலைவர் ஒவ்வோர் இந்தியரையும் பிரதிபலிப்பதுடன், ஒவ்வோர் இந்தியரையும் சம அளவில் நடத்துவார் என்று கூறினார்.
30 ஆண்டுகள்
தென்மாநிலங்களில் இருந்து ஒருவர் பிரதமராக வந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. கடைசியாக கர்நாடகாவை சேர்ந்த எச்.டி. தேவகவுடா, 1996 முதல் 1997 வரை பிரதமராக பதவி வகித்திருக்கிறார். அதன்பின்னர் 3 தசாப்தங்களாக தென்மாநிலங்களில் இருந்து பிரதமராக யாரும் வரவில்லை.
இந்த சூழலில், 2026 சட்டசபை தேர்தல் வெற்றியை கட்சி பயணத்தின் இறுதி இலக்காக எடுத்து கொள்ளாமல், அதனை கடந்தும் த.வெ.க. பயணிக்க வேண்டிய தேவையை அக்கட்சியினர் வெளிப்படுத்தி உள்ளனர்.