சென்னை,
தமிழக சட்டமன்றத்தில் த.வெ.க. அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு தொடங்கியது. வாக்கெடுப்பின் போது திமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தீர்மானத்திற்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். 22 எம்.எல்.ஏ.க்கள் எதிராக வாக்களித்தனர். 5 எம்.எல்.ஏ.க்கள் நடுநிலை வகித்தனர். இதையடுத்து தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். 144 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்தது.
இந்த வாக்கெடுப்பில் ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். அவர்கள் இருவரும் சென்னையில் இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின்னர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“ம.தி.மு.க.வின் முக்கியமான நிர்வாகக்குழு இன்று நடைபெற்ற நிலையில், அதில் ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருவரும் கலந்து கொள்வது அவசியம் என்று நாங்கள் முடிவெடுத்ததால், அவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். அவர்கள் சட்டசபைக்கு சென்றிருந்தால் த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்திருப்பார்களா? என்பது போன்ற கற்பனையான கேள்விகளுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது.
ஜோசப் விஜய் ஆட்சியை வரவேற்கிறோம் என்று நாங்கள் ஏற்கனவே சொல்ல்விட்டோம். விஜய்க்கு ஆதரவா? எதிர்ப்பா? என இப்போது கூற முடியாது. விஜய் அரசின் செயல்பாடுகளை 6 மாதங்கள் உற்றுநோக்குவோம். தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறோம், தோழமை தொடரும்.
திராவிட கட்சிகளை தோற்கடிப்பதற்காக விஜய் அரசியலுக்கு வரவில்லை. தான் ஆட்சியமைக்க வேண்டும் என்றுதான் விஜய் அரசியலுக்கு வந்தார். அ.தி.மு.க. ஆதரவு கொடுப்பதற்கு முன்பே விஜய்க்கு பெரும்பான்மை இருந்தது. அ.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கும்போது வேண்டாம் என விஜய் சொல்வாரா?
விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என்பது என் கருத்து. 717 டாஸ்மாக் கடைகளை மூடிய முதல்-அமைச்சரின் செயலுக்கு நன்றி. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அமல்படுத்த வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.