தமிழக செய்திகள்

பிரதமரின் சிக்கன நடவடிக்கை எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் கடந்து போகக்கூடாது - ஈஸ்வரன்

தமிழ்நாடு அரசு வரப்போகும் அபாய நிலையை புரிந்து கொள்ளாமல் அதற்கான எந்த ஒரு ஆலோசனைக்கும் முயற்சிப்பதாக தெரியவில்லை.

சென்னை,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ரஷ்யா, உக்ரைன் போர் மற்றும் அமெரிக்கா, ஈரான் போர் ஆகியவற்றால் உலக நாடுகள் பல வகைகளிலும் பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். முன்னெச்சரிக்கையாக சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றாத பாகிஸ்தான், இலங்கை போன்ற பல நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டிலும், உணவு தட்டுப்பாட்டிலும் செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிலைமை இந்தியாவிற்கு வந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் இந்திய பிரதமர் எதிர்காலத்தில் உருவாகப் போகும் பற்றாக்குறைகளை சரி செய்வதற்காக எல்லா மாநிலங்களும் பல விஷயங்களில் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டுமென்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இப்படி ஒரு எச்சரிக்கை விடும் பொழுது தன்னுடைய அரசியல் நிலைபாடு பலவீனமாகும் என்பதை உணர்ந்தும் கூட கள எதார்த்தத்தை புரிந்து கொண்டு நாட்டு மக்களை பாதுகாக்க சிக்கன நடவடிக்கை எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். பல மாநிலங்கள் நேர்மறை புரிதலோடு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். எரிபொருள் தட்டுப்பாடு விரைவில் உருவாகும் அபாயம் உள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரத்தட்டுப்பாடு உணவு பொருள் உற்பத்தியை பாதிக்கும். இதன் மூலம் எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாடு உருவாகும் அபாயம் உள்ளது.

தமிழ்நாடு அரசு வரப்போகும் அபாய நிலையை புரிந்து கொள்ளாமல் அதற்கான எந்த ஒரு ஆலோசனைக்கும் முயற்சிப்பதாக தெரியவில்லை. கொரோனா காலத்தில் மத்திய அரசின் எச்சரிக்கையை சரிவர பின்பற்றிய காரணத்தினால் தான் பெரும் பாதிப்பிலிருந்து தப்பித்தோம் என்பதை மறக்கக்கூடாது. கொஞ்சம் கூட தாமதம் இல்லாமல் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் சிக்கன நடவடிக்கைகளை துவக்குவதற்கு திட்டமிடுவதற்கான அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தை உடனே கூட்டி ஆலோசிக்க வேண்டும். உலகமே எதிர்கொள்கின்ற இந்த கவலைகரமான நிலையிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள இந்திய பிரதமரின் சிக்கன நடவடிக்கை எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் கடந்து போகக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT