நாகர்கோவில்,
புதுக்கோட்டையை சேர்ந்த கைதி தப்பியோடிய விவகாரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீசார் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் தீபன்ராஜ் (வயது 36), தற்போது குமரி மாவட்டம் திக்குறிச்சி அருகே வசித்து வருகிறார். இவர் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு உள்ளது. இந்த வழக்கில் தீபன்ராஜை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஆனால் அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஒரு வாரமாக சிகிச்சையில் இருந்த அவர் நேற்று முன்தினம் காலையில் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறினார். இதையடுத்து போலீசார் அவரை கழிவறைக்கு அழைத்து சென்றபோது போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பியோடி விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து தப்பியோடிய தீபன்ராஜை வலை வீசி தேடினர். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் தீபன்ராஜ் இரவு 7 மணி அளவில் இரணியல் பகுதியில் வைத்து போலீசாரிடம் சிக்கினார்.
ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்ட தீபன்ராஜ் நடந்தே சென்றுள்ளார். முதற்கட்ட தகவலில் அவர் வீட்டுக்கு செல்ல முயற்சி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததன் மூலம் அவர் செல்லும் திசையை போலீசார் கண்டறிந்து கைது செய்தனர். தற்போது அவரை ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கைதி தப்பி ஓடியதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை போலீஸ்காரர்கள் சசிகுமார், ராமஜெயம் மற்றும் வினோத் குமார் ஆகிய 3 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.