திருச்சி,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 51). இவர் மீது விருதுநகர் பஜார் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் கண்ணன் ஆயுள் தண்டனை பெற்று மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர், ஐ.டி.ஐ. படிப்பதற்காக மதுரை சிறையில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து அவர் கடந்த 27-ந் தேதி திருச்சி சிறை வளாகத்தில் ஹாலோ பிளாக் கற்கள் தயார்செய்யும் கூடத்தில் பணியில் இருந்தார். அப்போது திடீரென அவர் அங்கிருந்து தப்பி சென்றார். பணிக்கு சென்ற கைதிகள் குறித்து கணக்கெடுத்தபோது, அவர் தப்பி சென்று இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை அதிகாரிகள் அவரை அந்த பகுதி முழுவதும் தேடினார்கள்.
இந்தநிலையில் கொட்டப்பட்டு பகுதியில் சிறை வளாகத்தில் உள்ள ஒரு குடியிருப்பின் மாடியில் கண்ணன் பதுங்கி இருந்துள்ளார். 28-ந் தேதி அதிகாலை இதை கண்ட அந்த பகுதியினர் சிறை காவலர்களுக்கு தகவல்தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து அவரை பிடித்து சிறைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து சிறை அலுவலர் விவேக் அளித்த புகாரின்பேரில், கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.