தமிழக செய்திகள்

புழல் சிறையில் இருந்து தப்பிய கைதிகள் - ஒருவர் மீண்டும் கைது

நேபாளத்தை சேர்ந்த கைதி சுதீப் போகதி சென்னை அண்ணாநகர் பகுதியில் இருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது.

சென்னை,

புழல் சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதிகள் ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை புழல் சிறையில் 3,300-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தினமும் காலையில் அறைகளில் இருந்து வெளியே வருவதற்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். மாலை 6 மணியளவில் அனைவரும் மீண்டும் அவரவர் அறைகளில் அடைக்கப்படுவார்கள்.

இந்த நிலையில், நேற்று மாலை வழக்கம்போல் கைதிகளின் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டது. அப்போது நேபாளத்தை சேர்ந்த சுதீப் போகதி மற்றும் ஆயுள் தண்டனை கைதி சுரேஷ் ஆகியோரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறைக் காவலர்கள் மீண்டும் அனைத்து கைதிகளையும் சரிபார்த்தனர். இருப்பினும் 2 கைதிகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் இருவரும் சிறையில் இருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இதுபற்றி, சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகளின் உத்தரவின் பேரில் புழல் சிறை வளாகம் முழுவதும் 2 கைதிகளையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கைதிகளைப் பிடிப்பதற்காக 14 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேபாளத்தை சேர்ந்த கைதி சுதீப் போகதி சென்னை அண்ணாநகர் பகுதியில் இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், ஆயுள் தண்டனை கைதி சுரேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புழல் சிறையில் இருந்து கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT