தமிழக செய்திகள்

திருப்பூரில் சிலிண்டர்களை பதுக்கி வைத்த தனியார் நிறுவனத்திற்கு சீல் - அதிகாரிகள் நடவடிக்கை

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 123 சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர்,

ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க மத்திய பெட்ரோலியத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்தியா முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டு, சிலிண்டர்களை பதுக்கி வைத்திருப்பவர்களிடம் இருந்து சிலிண்டர்கள் கைப்பற்றபட்டு வருகின்றன.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அருள்புரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கேஸ் நிறுவனத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின்பேரில், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நேரில் சென்று அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, உரிமம் பெறாத காலி இடத்தில் சிலிண்டர்கள் பதுக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து, அங்கிருந்த 123 சிலிண்டர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், தனியார் கேஸ் நிறுவனத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.