தமிழக செய்திகள்

பைக் மீது லாரி மோதி தனியார் நிதி நிறுவன மேலாளர் பலி

தூத்துக்குடியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர், தனது பைக்கில் தருவைகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக பைக்கின் மீது நேருக்கு நேர் மோதியது.

தூத்துக்குடி பூபாலராயபுரம், 6-வது தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் சந்தனசுடலைமணி (வயது 22). இவர் தூத்துக்குடி பிரையண்ட்நகரில் உள்ள தனியார் கோல்டு ஃபைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார்.

நேற்று பணி நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில் குளத்தூர் பகுதிக்குச் சென்றுவிட்டு, மீண்டும் தூத்துக்குடி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார். தருவைகுளம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது, தூத்துக்குடியில் இருந்து குளத்தூர் நோக்கி எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சந்தனசுடலைமணி, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய பனையூர் தெற்கு தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முனியசாமி(25) என்பவரைப் போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் வயதிலேயே வங்கி அதிகாரியாக பணியாற்றி வந்த வாலிபர் விபத்தில் உயிரிழந்த சம்பவம், பூபாலராயபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.