தமிழக செய்திகள்

தனியார் மருத்துவக்கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது - அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை

மருத்துவக்கல்வி இயக்குனரகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.

சென்னை,

மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவக்கல்வி இயக்குனரகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது:-

தனியார் மருத்துவக் கல்லூரிகள்

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசின் வழிகாட்டுதல்படி எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதைத்தான் வசூலிக்க வேண்டும். ஆனால் சில கல்லூரிகள் நாலரை வருடங்களுக்கு கட்டணம் வாங்காமல் கூடுதலாக ஒரு ஆண்டுக்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. எங்கெல்லாம் புகார்கள் வருகின்றதோ அதனை விசாரிப்பதற்காக தனிக்குழு அமைத்து அந்த மருத்துவக் கல்லூரிகளில் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளோம்.

அதிக கட்டணம்

அதன்படி, மருத்துவக்கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்திருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே, சட்ட விதிகளுக்குப் புறம்பாக அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுகளுக்கு வலியுறுத்துகிறேன் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.