சென்னை:
ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, தனியார் பால் நிறுவனங்களும் பால் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளன. இதன் எதிரொலியாக, தனியார் பால் நிறுவனங்கள் பால் விற்பனை விலையையும் உயர்த்தி வருகின்றன.
தமிழகத்தில் மட்டுமின்றி பிற மாநிலங்களில் செயல்பட்டு வரும் தனியார் பால் நிறுவனங்களும் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளன. இதனால், பால் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே ஆரோக்கியா நிறுவனம் கடந்த 21-ந் தேதி பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.4 வரையும், தயிர் விலையை கிலோவுக்கு ரூ.2 வரையும் உயர்த்தியது.
இந்த நிலையில், டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, சீனிவாசா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் நாளை (சனிக்கிழமை) முதல் பால் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. அதன்படி, பால் வகைக்கு ஏற்ப லிட்டருக்கு ரூ.4 வரை விலை உயருகிறது.
500 மில்லி சமன்படுத்தப்பட்ட பால் ரூ.31-ல் இருந்து ரூ.32 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.35-ல் இருந்து ரூ.37 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.40-ல் இருந்து ரூ.42 ஆகவும் உயருகிறது.
இதேபோல், ஒரு லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் ரூ.59-ல் இருந்து ரூ.61 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.68-ல் இருந்து ரூ.70 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.78-ல் இருந்து ரூ.81 ஆகவும் உயர்த்தப்படுகிறது. 500 கிராம் தயிர் விலையும் ரூ.1 உயர்த்தப்படுகிறது.
இதன் மூலம் தனியார் பால் மற்றும் ஆவின் பால் விலைக்கு இடையேயான வித்தியாசம் மேலும் அதிகரித்துள்ளது. தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.14 முதல் அதிகபட்சம் ரூ.30 வரை அதிகமாக உள்ளது.
இதனால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் ஆவின் பால் பக்கம் திரும்பும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.