சென்னை,
பாதாள சாக்கடை திட்டம் என்பது நகர்ப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், சுகாதாரத்தை உறுதிப்படுத்தவும் செயல்படுத்தப்படும் ஒரு முக்கிய உள்கட்டமைப்பு திட்டமாகும். தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்களில் இத்திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டுடன் AMRUT 2.0 திட்டத்தின் கீழ் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் திருநெல்வேலி, வேலூர், சேலம், திண்டுக்கல், நாகர்கோவில் உள்ளிட்ட மாநகராட்சிகளில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பாதாள சாக்கடை திட்டத்தை தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. முதற்கட்டமாக நாகர்கோவில், மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகளை தனியார் பங்களிப்புடன் மேற்கொள்வதற்கு விரிவான திட்ட அறிக்கை கோரி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை டெண்டர் கோரியுள்ளது.
2 மாதத்தில் விரிவான திட்ட அறிக்கையை சமர்பித்து ஒப்புதல் பெறப்பட்ட பின் அடுத்த 3 மாதத்தில் ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் என்றும் ரூ.50,000 டெபாசிட் செலுத்தி இ டெண்டர் முறையில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.