சிவகாசி,
பட்டாசு தயாரிக்க தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வாலும், 300 ஆலைகளில் உற்பத்திக்கு விதிக்கப்பட்ட தடையாலும் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. இதனால் பட்டாசுகள் விலை உயர வாய்ப்பு உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தேவையான பட்டாசு தயாரிக்கும் பணி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. 70 சதவீத பட்டாசு ஆலைகள் உற்பத்தியில் தீவிரம் காட்டின. சுமார் 30 சதவீத பட்டாசு ஆலைகளில் குறைந்த அளவு தொழிலாளர்களை கொண்டு குறிப்பிட்ட சில ரக பட்டாசுகளை மட்டும் தயாரித்து வந்தனர்.
இந்தநிலையில் பட்டாசு உற்பத்தியின்போது சில ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டன. அதாவது, விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 24 வெடி விபத்துகள் ஏற்பட்டு அதில் 41 பேர் பலியாகினர். 39 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்துகளுக்கான காரணம் குறித்து ஆராய அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு கொடுத்த தகவல்களின்படி பட்டாசு ஆலைகளில் விதிமீறல்களால் விபத்துகள் ஏற்பட்டது தெரியவந்தது.
இதை தொடர்ந்து பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் 700-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் ஆய்வுகள் நடத்தினர். அதில் 300-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்திக்கு தடை விதித்தனர். இதனால் இந்த ஆண்டு வழக்கமாக உற்பத்தி செய்யும் பட்டாசுகளின் உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு சுமார் ரூ.7 ஆயிரம் கோடிக்கு பட்டாசு உற்பத்தி செய்த பட்டாசு உற்பத்தியாளர்கள், இந்த ஆண்டு அந்த முழு அளவை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வரை சுமார் ரூ.4 ஆயிரத்து 600 கோடி மதிப்புள்ள பட்டாசுகள்தான் தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடி மதிப்புள்ள பட்டாசுகள்தான் உற்பத்தி செய்ய முடியும். அப்படி பார்த்தால் இந்த ஆண்டு தீபாவளிக்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள பட்டாசுகள்தான் உற்பத்தி செய்து சந்தைக்கு அனுப்பி வைக்க முடியும் என்று கூறுகிறார்கள்.
பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை கடந்த 10 மாதங்களில் 5 முறை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பட்டாசுகளின் விலையும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சுமார் 25 சதவீதம் முதல் 30 சத வீதம் வரை விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகிறார்கள். மூலப்பொருட்கள் விலை ஏற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக பல ரக பட்டாசுகளை தயார் செய்வதை உற்பத்தியாளர்கள் நிறுத்திவிட்டனர். சிறுவர்களை மகிழ்விக்கும் பட்டாசுகளின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
பட்டாசு தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வெளி மாவட்டங்களில் இருந்து விருதுநகர் மாவட்டத்துக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உரிய அனுமதி வழங்க வேண்டும். அந்த அனுமதி வழங்குவதில் கடந்த மாதம் ஒரு வாரம் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பல ஆலைகளில் பட்டாசு தயாரிப்பு பாதிக்கப்பட்டது. இப்படி பட்டாசு தொழிலுக்கு பல பிரச்சினைகள் இந்த ஆண்டு ஏற்பட்டதால் உற்பத்தி கடுமையாக சரிந்துள்ளது.