பழனி,
பழனி முருகன் கோவிலில் நாளை நடைபெறும் சூரசம்ஹாரத்தையொட்டி அசுரர்களின் உருவ பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 10-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நாளை அதிகாலை மலைக்கோவில் நடை திறக்கப்பட்டு, விளா பூஜை, உச்சிக்கால பூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து அசுரர்களை வதம் செய்வதற்காக சின்னக்குமாரர் அம்மனிடம் இருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதையடுத்து சின்னக்குமாரர் வில், அம்பு, கேடயம் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நவவீரர்களுடன் மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு அடிவாரத்தில் உள்ள பாதவிநாயகர் கோவிலில் எழுந்தருளுகிறார். பின்னர் திருஆவினன்குடி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் கிரிவீதிகளில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
இதில் தாரகாசுரன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகிய அசுரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 16-ந்தேதி பழனி மலைக்கோவிலில் சண்முகர் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக அசுரர்களின் உருவ பொம்மைகள் தயாரிக்கும் பணி பழனி பெரிய நாயகி அம்மன் கோவிலில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் பழனியை சேர்ந்த ராமசாமி மகன் குமரேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது குடும்பத்தினர் கடந்த 3 தலைமுறைகளாக அசுரர்களின் உருவ பொம்மைகளை தயாரித்து வருகின்றனர்.
இதற்காக அசுரர்களின் உடல், கை, தலை உள்ளிட்ட உறுப்புகளை தனித்தனியாக தயாரித்து ஒன்றிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவடைந்ததும் அசுரர்களின் உருவ பொம்மைகள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.