சென்னை,
சென்னை மக்களுக்கு ஏரிகள், நிலத்தடி நீர் ஆதாரங்கள்,கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றில் இருந்து 84 குடிநீர் வினியோக நிலையங்களில் இருந்தும் பிரதான குழாய்கள் மூலம் 120 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்ய வகை வழிவகை செய்யும் வகையில் தனித்தனியாக அதற்கான குழாய்கள் அமைக்கும் பணிக்கு இன்று முதல்- அமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டியுள்ளார்.
இக்கட்டான காலங்களில் ஒரு பகுதியில் நீர் பற்றாக்குறை இருந்தால் மாற்று பகுதியில் இருந்து அந்த தேவையான பகுதிக்கு நீரை அனுப்புவதற்கு உண்டான திட்டமாக 'பிரதான சுற்றுக்குழாய் திட்டம்' சென்னை குடிநீர் வாரியத்தால் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கு 40 கோடி லிட்டர் திறன் கொண்ட தண்ணீரை குடிநீராக்கும் திட்டத்தையும் சேர்த்து 9 குடிநீர் ஆதாரங்கள் ஒரு வளையமாக இணைக்கப்படுகிறது. உந்து நிலையங்கள், குடிநீர் வினியோக குழாய்களை உள்ளடக்கியதாக இந்த திட்டம் 98 கி.மீ. தூரத்திற்கு துருப்படிக்காத ஸ்டீல் குழாய்கள் பதிக்கப்பட உள்ளது. மேலும் நாளொன்றுக்கு 1762 மில்லியன் லிட்டர் குடிநீரைக் கையாளும் வகையில் சுற்றுக்குழாய் திட்டம் வடிவமைக்கப்பட உள்ளது.
இந்த பணிகள் எல்லாம் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியோடு சேர்த்து ரூ.3,108 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சோழிங்கநல்லூரில் இன்று (புதன்கிழமை) மாலை, தமிழக முதல்-அமைச்சர் விஜய், அங்கு வைக்கப்பட்டிருந்த மணலை அள்ளிப்போட்டும், மரக்கன்று நட்டும் இந்த திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் சிலர் மற்றும் குடிநீர்த் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.