எஸ்டிபிஐ கட்சி 
தமிழக செய்திகள்

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் சாலையோர வியாபாரத்தை மட்டுமே நம்பி தங்களின் அன்றாட வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.கே.கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

நடைபாதை ஆக்கிரமிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்துகிறோம் என்ற பெயரில் அன்றாட பிழைப்புக்காக சாலையோரங்களிலும் நடைபாதைகளிலும் சிறு வியாபாரம் செய்து வரும் சாமானிய மக்களை அரசு அதிகாரிகள் அப்புறப்படுத்த கூடாது.

நகர விற்பனை குழு

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட 2014-ம் ஆண்டின் சாலையோர வியாபாரிகள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் மற்றும் 2015-ம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் விதிகள் ஆகியவை சாலையோர வியாபாரிகளுக்கு தெளிவான சட்டப்பூர்வப் பாதுகாப்பை வழங்குகின்றன. இச்சட்டத்தின்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ‘நகர விற்பனை குழு’ அமைக்கப்பட்டு, வியாபாரிகளுக்கு முறையாக அடையாள அட்டைகளும் விற்பனை சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

வாழ்வாதாரம்

தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் சாலையோர வியாபாரத்தை மட்டுமே நம்பி தங்களின் அன்றாட வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். சென்னை ஐகோர்ட்டும் தனது தீர்ப்பில், சட்ட விதிகளுக்கு உட்பட்டும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே தெரிவித்துள்ளது.

கேள்விக்குறியாக்கிவிடும்

ஆனால், நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, சட்ட விதிகளை புறக்கணித்துவிட்டு ஏழை, எளிய சிறு வியாபாரிகளின் கடைகளை அதிகாரிகள் அவசரகதியில் அகற்ற முற்பட்டால், அது லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிடும்.

ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை

எனவே, தமிழ்நாடு அரசு அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல், சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் 'நகர விற்பனைக் குழுவுடன்' முறையாக ஆலோசித்த பிறகே எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டும். சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் முழுமையாக பாதுகாக்கப்படும் அதே வேளையில், பொதுமக்களும் நடைபாதைகளை எவ்வித இடையூறுமின்றிப்பயன்படுத்தும் வகையிலான முறையான ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT