தமிழக செய்திகள்

தேர்தலை புறக்கணித்து போராட்டம்: தீக்குளிக்க முயன்ற வழக்கறிஞர் - விழுப்புரத்தில் பரபரப்பு

கொட்டகுப்பம் 10 மற்றும் 11வது வார்டு மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தராத அரசை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம்,

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதி, கொட்டகுப்பம் 10 மற்றும் 11வது வார்டு மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தராத அரசை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அவர்கள் தொடர்ந்து தேர்தலை புறக்கணித்து வருகின்றனர்.

காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், அரசு அதிகாரிகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வராததை கண்டித்து, அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திகேயன் தான் கொண்டுவந்த பெட்ரோலை திடீரென தனது மீது ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் உடனடியாக தண்ணீர் ஊற்றி அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதி அருகே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர், எஸ்.பி. தலைமையிலான அதிரடி படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.