தமிழக செய்திகள்

டாஸ்மாக் கடை எதிர்ப்பு போராட்டம்: பள்ளி மாணவிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்கு டி.டி.வி தினகரன் கண்டனம்

டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்தார்.

சென்னை,

டாஸ்மாக் கடை எதிர்ப்பு போராட்டம்: பள்ளி மாணவிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்கு டி.டி.வி தினகரன் கடும் கண்டனம். இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

பள்ளி மாணவிகள் மீது தாக்குதல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி பொதுமக்களுடன் இணைந்து போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஜனநாயகத்திற்கு எதிரான அணுகுமுறை

மக்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாத்து சட்டம், ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய பொறுப்பும், கடமையுமிக்க காவல்துறையினரே, சமூக பொறுப்புடனும், துணிச்சலுடன் குரல் எழுப்பிய பள்ளி மாணவிகளிடம் தனது அதிகாரத்தை வெளிப்படுத்தியிருப்பதும், அவர்களை குற்றவாளிகளை போல சித்தரித்திருப்பதும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அணுகுமுறையாகும்.

அதிகாரப்போக்கு

குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருபுறம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கிவிட்டு, மறுபுறம் பெண்களுக்கு நாள்தோறும் பல்வேறு சிக்கல்களை உருவாக்கி கொண்டிருக்கும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி அறவழியில் போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவியிருப்பது தவெக அரசின் அளவுக்கு மீறிய அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது.

வலியுறுத்தல்

எனவே, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடி காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு, பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.