தமிழக செய்திகள்

பிப்ரவரி 12ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்: மு.வீரபாண்டியன்

பாஜக மத்திய அரசின் 2026-27-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டை புறக்கணித்து, மக்கள் நலனை வஞ்சித்துள்ளது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாஜக மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும் நாட்டின் பொதுச் சொத்துக்களை பாதுகாக்கவும் மத்திய தொழிற்சங்கங்களும், ஐக்கிய விவசாயிகள் முன்னணியும் பிப்ரவரி 12ல் அறிவித்துள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக அமைய இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் ஆதரவையும் ஒத்துழைப்பையும் தெரிவித்துள்ளன. கட்சியின் வர்க்க, வெகு மக்கள் அமைப்புகள் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என அறிவித்துள்ளன.

இதற்கிடையில், பாஜக மத்திய அரசின் 2026-27-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டை புறக்கணித்து, மக்கள் நலனை வஞ்சித்துள்ளது. இந்த மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும், விவசாயத் தொழிலாளர் உள்ளிட்ட உடல் உழைப்புத் தொழிலாளர் குடும்பங்களின் வேலை பெறும் உரிமையை பறித்து, 125 நாள் வேலை தருவதாக ஏமாற்றும் விபி ஜிராம்ஜி திட்டத்தை திரும்பப் பெற்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி 12.2.2026 கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் பிப்ரவரி 11-ம் தேதி இரவு 12 மணிக்கு தொடங்கி, 12.2.2026-ம் தேதி இரவு 12 மணிக்கு நிறைவு பெறுகிறது. எனினும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ள பட்ஜெட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாலையில் நடத்த வேண்டும் கட்சி அமைப்புகளையும், வர்க்க வெகுமக்கள் அமைப்புகளையும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சந்தர்ப்பவாத, சுயநல ஆதாயம் தேடும் மலிவான அரசியலை மக்கள் மத்தியில் விரிவாக கொண்டு செல்வதில் அனைவரும் முனைப்புடன் செயல்பட்டு பொது வேலை நிறுத்தம், மறியல், கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் எனவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.