தமிழக செய்திகள்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்: தூத்துக்குடியில் மணிகண்டன் மனைவி பேட்டி

ஆலங்குளத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜாவால் சுடப்பட்ட மணிகண்டனின் மனைவி, நீதி கோரி காமராஜர் சிலை முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை மே 26-ம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் கிராமத்தில், கடந்த 7.4.2026 அன்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா என்பவரால் மணிகண்டன் என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மணிகண்டனின் மனைவி பொன்மணி கூறியதாவது:

எனது கணவரை துப்பாக்கியால் சுட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜாவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள எனது கணவருக்கு தமிழக அரசு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

மேலும், எங்கள் குடும்ப வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதுவரை எங்களுக்கு எந்தவித நீதியோ, உதவியோ கிடைக்கவில்லை. எங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வருகிற மே 26-ம் தேதி ஆலங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பாகச் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது, சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு தமிழ்நாடு நிறுவனர் தலைவர் சிலுவை, வழக்கறிஞர்கள் திலக் மற்றும் நம்பிராஜன் ஆகியோர் உடனிருந்தனர். காவல்துறையினரின் அத்துமீறலுக்கு எதிராக வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.