தமிழக செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்; கைது செய்த விவசாயிகளை உடனே விடுவிக்க வேண்டும்: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்யக் கோரி போராடியதற்காக கைது செய்துள்ள விவசாயிகள், விவசாயிகள் சங்க நிர்வாகிகளை உடனே விடுவிக்க வேண்டும் என தமிழக அரசை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக வெற்றிக் கழகம், தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதிமொழிப்படி ஐந்து ஏக்கர், அதற்கும் குறைவான நிலமுடைய விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், புதிய கடன்களை நிபந்தனையின்றி வழங்க வேண்டும், மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள சாகுபடி பாதிப்பிற்கு உரிய நிவாரணமும், வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்கிட வேண்டும்.

மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது

டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்கு தேவையான தண்ணீரை தொடர்ந்து திறந்துவிட வேண்டும். உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின் படி காவிரி நீரை பெற தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி உள்பட தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு இன்று (21.10.2026) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கைது

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, சங்கத்தலைவர்கள் எம்.சேகர், டி.முருகையன், டி.தியாகராஜன், நாகப்பட்டினம் மக்களைவை உறுப்பினர் வை.செல்வராஜ் எம்.பி., திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் க.மாரிமுத்து எம்.எல்.ஏ., எஸ்.கேசவராஜ், கோ.சக்திவேல் உள்ளிட்ட தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்துள்ள தலைவர்கள், விவசாயிகளை உடனே விடுவிக்க வலியுறுத்தல்

கைது செய்யப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் விவசாயிகள் அனைவரையும் தமிழ்நாடு அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT