தமிழக செய்திகள்

டெல்லியை தொடர்ந்து சென்னையில் போராட்டம்; கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கைது

இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

சென்னை

சென்னையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. ஏறக்குறைய 13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ள சூழலில், உரிய முறைகளின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

எனினும், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார், மற்ற இரு ஆணையாளர்களின் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாமல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த நீக்கத்திற்கு அவரது அரசு சார்பு நடவடிக்கைகளே காரணம் எனக்கூறி எதிர்க்கட்சியினர், அவரை பதவி விலக வலியுறுத்தி வருகிறார்கள். தவிர, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பதவி விலக வலியுறுத்தல்

எனினும், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார், மற்ற இரு ஆணையாளர்களின் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாமல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து அவர் பதவி விலகக்கோரி, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று ஆம் ஆத்மி கட்சியும், இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதேபோன்று சமீபத்தில், மராட்டியத்தின் மும்பை சிவாஜி பார்க்கில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, 3-ந்தேதி அகில இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடத்தியது.

டெல்லியில் போராட்டம்

இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். எனினும், போலீசார் இதற்கு அனுமதி மறுத்துள்ளனர். போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ள சூழலில், தடையை மீற வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர். வன்முறை எதுவும் பரவாமல் தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், எல்லை பாதுகாப்பு படையினர், டெல்லி காவல் துறையினர் என ஏறக்குறைய 25 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சூழலில், டெல்லி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னையின் பெசன்ட் நகர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு போலீசாரின் முன் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். அவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.

தர்ணா போராட்டம்

எனினும், அதில் சமரசம் ஏற்படவில்லை. கலைந்து செல்ல மறுத்த அவர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். ‘நீங்கள் எங்களை தேர்ந்தெடுக்க கூடாது “சார்”, நாங்களே உங்களை தேர்ந்தெடுக்கிறோம், 13 கோடி வாக்காளர்கள் நீக்கம், சிஸ்டம் சரியில்லை’ போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஏந்தியபடி அவர்கள் கோஷங்களையும் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். தொடர்ந்து கூடுதல் போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

SCROLL FOR NEXT