சென்னை,
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. புதிய வரவான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இந்த சூழலில் தமிழக கவர்னர் ஆர்.வி.அர்லேகரை தவெக தலைவர் விஜய் நேற்று சந்தித்து ஆட்சி அமைப்பதற்காக உரிமை கோரினார்.
அப்போது அவர், த.வெ.க.வின் 108 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரசைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்கினார். ஆனால் அதை பெற்றுக்கொண்ட கவர்னர், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் விஜய் முதல்-அமைச்சர் ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் இந்த பரபரப்பான அரசியல் சூழலால், மாநிலத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க தமிழக போலீசாருக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தவெக தலைவர் விஜய் இன்னும் ஆட்சி அமைக்காத சூழலில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்பது தள்ளிப்போவது அவரது தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. விஜய்க்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம் போல போராட்டம் நடத்தப்படும் என தவெகவினர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.