தூத்துக்குடி,
தூத்துக்குடியில் சட்டவிரோத மனமகிழ் மன்றம் மற்றும் மதுபானக் கடையை மூட வலியுறுத்தி 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 46 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே அய்யனார்புரத்தில் பொதுமக்களுக்குப் இடையூறாக இயங்கி வரும் சட்டவிரோத மனமகிழ் மன்றம் மற்றும் மதுபானக் கடையை உடனடியாக மூடக் கோரி, அப்பகுதி மக்கள் நேற்று 2-வது நாளாக தன்னெழுச்சியாகத் திரண்டு தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கீழ அரசடி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அய்யனார்புரம் பகுதியில் சட்டவிரோதமாக மனமகிழ் மன்றம் மற்றும் மதுபானக் கடை இயங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பதுடன், பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இதனைக் கண்டித்து அய்யனார்புரம், கீழ அரசடி, வெள்ளப்பட்டி மற்றும் கோமஸ்புரம் ஆகிய சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை முதலே திரண்டு 2-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்குப் பல ஜனநாயக சக்திகள், மக்கள் நல அமைப்புகள் மற்றும் சமூக இயக்கங்கள் தங்களது ஆதரவை விவரித்துள்ளன.
பொதுமக்களின் அமைதியான வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த சட்டவிரோதக் கடையை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உடனடியாக தலையிட்டு நிரந்தரமாக மூட வேண்டும் எனப் பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர். போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டுச் சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து கலைந்து செல்ல மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 46 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் தொடர்ந்து பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.