தமிழக செய்திகள்

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி செப்.8-ல் போராட்டம் - தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த 13 வருடமாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

சென்னை,

செப்.8-ந் தேதி காலையில் கோட்டை முற்றுகை போராட்டம் அல்லது தொடர் முழக்கப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 13 வருடமாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால் ஆட்டோ டிரைவர்கள் இஷ்டத்துக்கு கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கிறார்கள். பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, வட்டார போக்குவரத்து அலுவலக கட்டணங்கள் உயர்வு போன்றவற்றால் ஆட்டோ டிரைவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், குறைந்த கட்டணமாக ரூ.100 வசூலிப்பதால் பொதுமக்களுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

தொடர் போராட்டம்

ஆட்டோவுக்கான கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று கடந்த ஆட்சி காலத்தில் இருந்தே தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் அந்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை ஆட்டோ தொழிலாளர்கள் நடத்தி வருகிறார்கள். போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஆட்டோ தொழிற்சங்க பிரதிநிதிகள் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

ஆட்டோ தொழிற்சங்கத்தினர்

அப்போது அவர்கள் தமிழ்நாட்டில் பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணமாக முதல் 1.5 கி.மீட்டருக்கு ரூ.60 -ம் அடுத்த ஒவ்வொரு கி.மீட்டருக்கு ரூ.30-ம் நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. சட்டசபையில் போக்குவரத்து மானிய கோரிக்கையின் போது இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று ஆட்டோ தொழிற்சங்கத்தினர் அழுத்தம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த போக்குவரத்து மானிய கோரிக்கை செப்டம்பர் 8-ந் தேதிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தொழிற்சங்கத்தினர் அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சி.ஐ.டி.யு ஆட்டோ தொழிற்சங்க மாநில செயலாளர் எஸ். பாலசுப்பிர மணியம் கூறியதாவது:-

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை நிர்ணயிக்காமல் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுகிறது. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எங்களது நியாயமான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கோட்டை முற்றுகை போராட்டம்

வருகிற 8-ந் தேதி மானிய போக்குவரத்து கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அப்போது போக்குவரத்து துறையில் பல அறிவிப்புகள் வெளியிடப்படும். ஆட்டோ தொழிலாளர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வரும் குறைந்தபட்ச கட்டணம் தொடர்பான அறிவிப்பு வெளியிட வேண்டும். பைக் டாக்ஸிக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாகவும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அன்று காலையில் கோட்டை முற்றுகை போராட்டம் அல்லது தொடர் முழக்கப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

எழும்பூர் ராஜரத்தினம், ஸ்டேடியத்தில் இருந்து இந்த போராட்டம் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.