இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் இன்று (11.3.2026) புதன்கிழமை சென்னையில் உள்ள மாநிலக் கட்சி அலுவலகத்தில் தோழர்கள் எம்.செல்வராஜ் (திருச்சி), டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, எஸ்.கே.சிவா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மார்ச் 14ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்:
இந்திய மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை முறையே ரூ.60, ரூ.114.50 என உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றத்தையுயும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் யுத்தவெறி தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் காரணம் காட்டியுள்ளது.
அமெரிக்கா- இஸ்ரேல் நாடுகள் சர்வதேச நாடுகளுக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லும் முக்கிய கடல் வழி பாதையான ஹர்முஸ் துறைமுகத்தின் மீது நடத்திய தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 19 - 25 தேதிகளில் நடைபெற்ற பன்னாட்டு கடற்படைப் பயிற்சியில் (மிலான்) பங்கேற்று நாடு திரும்பிய ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நீர்மூழ்கி கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் இருந்த போது தாக்குதல் நடத்தி, அதிலிருந்த 83 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து பாஜக மத்திய அரசு வாய்திறந்து பேசாமல், நாட்டின் அயலுறவு கொள்கைக்கு துரோகம் இழைத்து, கோழைத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின், டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் நிர்பந்தத்திற்கு அடி பணிந்து, ரஷ்ய நாட்டிலிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வந்ததை நிறுத்தி விட்டது. இப்போது நெருக்கடி ஏற்பட்ட நிலையில் ஒரு 30 நாட்கள் மட்டும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்பிடம் அனுமதி கேட்டு, நாட்டின் இறையாண்மையை கை விட்டுள்ளது. நீடித்த அமைதி மற்றும் நிலைத்த சமாதானத்திற்கு குரல் கொடுக்க தவறியதன் மூலம் கச்சா எண்ணெய் நெருக்கடியை நாடு எதிர் கொண்டு நிற்கிறது.
சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தியதுடன் தீவிர கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் 15 நாட்களுக்கு ஒரு முறை பதிவு செய்யலாம் என்பதை மாற்றி, சிலிண்டர் பெற்ற பிறகு 25 நாட்களுக்கு பிறகுதான் அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போதே பதிவுக்கான கோரிக்கைகளை ஏற்பதில்லை என்பது நடைமுறையாகி விட்டது. இது குடும்பத் தேவைகளுக்கு மீண்டும் விறகு தேடும் நிலைக்கு மக்களை தள்ளி விடுவதுடன், கள்ள சந்தை வணிகத்தை ஊக்கப்படுத்தி வருகிறது. இதனால் உணவகங்கள், தேனீர் கடைகள் உள்ளிட்ட வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு, நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன என்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி சுட்டிக் காட்டுகிறது.
இந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, உயர்த்தப்பட்ட விலை உயர்வை ரத்து செய்து, தட்டுபாடு இல்லாமல் சமையல் எரிவாயு கிடைக்க, ஜாம் நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் ஏற்றுமதியை நிறுத்தி, உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதையும், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் பொதுமக்கள் தேவைக்காக உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்துவதையும் உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 14.3.2026 தேதியில் மாவட்ட, வட்ட, வட்டாரத் தலைநகர்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு முடிவு செய்கிறது. நாட்டின் நலனையும், மக்கள் நலனையும் முன்னிறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பிரிவு மக்களும் பங்கேற்று ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.