நெல்லை,
வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் 2.0 என்கிற குறைதீர்க்கும் கூட்டம் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வருகிற 27-ந்தேதி நடைபெறும் என நெல்லை மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் சிவசண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
வருங்கால வைப்புநிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் இணைந்து நடத்தும் 'வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் 2.0' நிகழ்ச்சி வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. இத்திட்டம் வருங்கால வைப்புநிதி மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், ஓய்வூதியம் பெறுவோரின் குறைதீர்க்கும் மற்றும் சேவை வழங்கும் தளமாகவும், தகவல் பரிமாற்ற அமைப்பாகவும் செயல்படும். வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் 2.0 நிகழ்ச்சி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வருகிற 27-ந்தேதி காலை 9 மணி முதல் பின்வரும் இடங்களில் நடைபெறும்.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் பள்ளியிலும், தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம் ரெயில் நிலையம் அருகில் ஸ்ரீமுருகன் டைல்ஸ் ஒர்க்ஸ் நிறுவனத்திலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்டரங்கிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். இதில் இ.எஸ்.ஐ., பி.எப். சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழில் அதிபர்கள், தொழிற்சங்கங்கள், தொழில் நிறுவன அமைப்புகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.