தமிழக செய்திகள்

சென்னை மாநகராட்சி பள்ளி பாலின மன்ற ஆசிரியர்களுக்கு உளவியல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சென்னை பள்ளிகளின் பாலின மன்ற ஆசிரியர்களுக்கான உளவியல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரனின் உத்தரவுவின்படியும், இணை ஆணையாளர் (கல்வி) க.கற்பகமின் வழிகாட்டுதலின்படியும் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் பாலினமன்ற ஆசிரியர்களுக்கான உளவியல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் இன்று (25.07.2026) நடைபெற்றது.

உளவியல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

இந்நிகழ்ச்சியின் நோக்கமானது குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரின் உளவியல் குறித்த ஆசிரியர்களின் புரிதலை வலுப்படுத்துவதையும், மாணவர்களின் உணர்வுசார் நல்வாழ்வு மற்றும் நேர்மறையான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கான நடைமுறை அணுகுமுறைகளை அவர்களுக்கு வழங்குவதுமாகும்.

இந்நிகழ்ச்சியை பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார். குழந்தைகளின் தன்னம்பிக்கை, நடத்தை மற்றும் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் முக்கியப் பங்கை அவர் எடுத்துரைத்தார். நேர்மறை வலுவூட்டல், ஊக்கம் மற்றும் பரிவுள்ள வழிகாட்டுதல் ஆகியவை ஒரு குழந்தையின் சுயமரியாதையை மாற்றி, அவர்களின் திறனை உணர்த்திட உதவும் என்று தெரிவித்தார்.

ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்பு

இந்நிகழ்ச்சியில், சுவிட்சர்லாந்தின் சூரிச்சைச் சேர்ந்த சர்வதேச பகுப்பாய்வு உளவியலாளரும், சூரிச் ISAP-இன் மெட்ரிகுலேட்டட் தணிக்கையாளருமான டாக்டர் அக்ஷயா ராஜா சிறப்புரையாற்றினார். ஒவ்வொரு குழந்தையின் நடத்தையும் ஒரு வகையான தகவல்தொடர்பு என்பதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், குழந்தைகளை திருத்தும் முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். குழந்தைகளின் பலத்தினை அங்கீகரிக்கவும், அவர்களின் முயற்சிகளைப் பாராட்டவும், உணர்வு ரீதியாக மீள்திறன் கொண்ட மற்றும் தன்னம்பிக்கையான தனிநபர்களை வளர்க்க நேர்மறையான வழிகாட்டுதலைப் பயன்படுத்தவும் ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

மேலும், பாலினமன்ற ஆசிரியர்களுக்கு வகுப்பறை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், நடத்தை சார்ந்த கவலைகள், உணர்வு, நல்வாழ்வு, சக வயது உறவுகள் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்கான பயனுள்ள அணுகுமுறைகள் குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.