தமிழக செய்திகள்

சென்னையில் 2 மற்றும் 3ம் தேதிகளில் தாயுமானவர் திட்டத்தில் பொது விநியோக பொருட்கள்

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 2026 திங்களுக்கு 02.02.2026 மற்றும் 03.02.2026 ஆகிய 2 தினங்களில் சென்னையிலுள்ள அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையார், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள், அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பொது மக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.