தமிழக செய்திகள்

சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் 14-ந்தேதி பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம்

நியாய விலைக்கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்றும் வழங்கப்படும்.

சென்னை

சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் 14-ந்தேதி பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

பொது விநியோகத்திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 2026 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 14.11.2026 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

அங்கீகார சான்று

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத்திட்டம் தொடர்பான சேவைகள் இம்முகாமில் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக்கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்றும் வழங்கப்படும்.

பொது விநியோக நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால், குறைகளுக்கு விரைந்து தீர்வு காண செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இச்சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்களில் பெறப்படும் கடவுச்சொல் வழியாக (OTP) மட்டுமே மேற்கொள்ளப்படும் என்பதால் குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

SCROLL FOR NEXT