தமிழக செய்திகள்

வாரத்தில் 2 நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்: நெல்லை சரக டி.ஐ.ஜி. தகவல்

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை, சனிக்கிழமைகளில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்களிடமிருந்து குறைகள் மனுக்களாக பெறப்பட உள்ளன என நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி காவல் சரகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது என நெல்லை சரக டி.ஐ.ஜி. இரா.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

4 மாவட்டங்களில் நாளை முதல் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்:

தமிழ்நாடு காவல்துறை சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்படி, திருநெல்வேலி காவல் சரகத்தின் கீழ் உள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் பொதுமக்களின் குறைகளை விரைவாகக் கேட்டு தீர்வு காணும் நோக்கில் "பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்" நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்களிடமிருந்து குறைகள் மனுக்களாக பெறப்பட உள்ளன.

பொதுமக்கள் தங்களது மனுக்கள் மற்றும் குறைகளை திருநெல்வேலி காவல் சரக அலுவலகத்தில் உள்ள டி.ஐ.ஜி.யிடமும், அந்ததந்த மாவட்ட காவல் அலுவலகங்களில் உள்ள எஸ்.பி.க்களிடமும், மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் உள்ள டி.எஸ்.பி.க்களிடமும், அந்தந்த காவல் நிலையங்களில் உள்ள இன்ஸ்பெக்டர்களிடமும் நேரடியாக அளித்து பயன்பெறலாம். பெறப்படும் மனுக்கள் மீது உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு, விரைவான மற்றும் உரிய தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் குறைதீர்ப்பு நாள்:

முதல் குறைதீர்ப்பு நாள் நாளை (24.6.2026, புதன்கிழமை) நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது குறைகள் மற்றும் மனுக்களை சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளிடம் நேரடியாக தெரிவித்து பயனடையலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.