சென்னை,
தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் வாரத்தில் 2 நாட்கள் விடுப்பு வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் வாரத்தில் 2 நாட்கள் கட்டாய வாராந்திர விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி இன்று (திங்கட்கிழமை) சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
பொதுமக்கள் நலன் கருதி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், தற்போதைய நவீன வாழ்வியலில் தொழிலாளர்கள் கடுமையான வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருவதாகக் குறிப்பிடப்பட்டது. ஊழியர்களின் உடல்நலம், மனநலம் மற்றும் குடும்ப உறவுகளை மேம்படுத்த வாரத்தில் 2 நாட்கள் ஓய்வு என்பது அத்தியாவசியமானது என மனுதாரர் சுட்டிக்காட்டினார்.
தொடர் சேவை தேவைப்படும் அரசு மற்றும் தனியார் துறைகளில், பொதுமக்களுக்கான பணிகள் பாதிக்கப்படாத வண்ணம் ஊழியர்களைச் சுழற்சி முறையில் பணியமர்த்தி இந்த 2 நாட்கள் விடுமுறையைச் செயல்படுத்தலாம் என்றும் மனுவில் வழிவகை கூறப்பட்டது. தற்போதைய தொழிலாளர் சட்டங்களின்படி வாரத்தில் ஒரு நாள் மட்டுமே கட்டாய விடுமுறையாக உள்ள நிலையில், இந்த வழக்கு ஊழியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனு விரைவில் நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.