தென்காசி,
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், குற்றாலத்தில் இந்த மாத இறுதியில் குளுகுளு சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. தற்போது பழைய குற்றாலம் அருவியில் பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகின்றன.
இதற்கிடையே, பழைய குற்றாலம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு ரூ.20 நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத்துறை அறிவித்தது. அதன்படி, பழைய குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளிடம் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இதற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. கட்டணம் வசூலிப்பது குறித்து சிலர் வனத்துறை அலுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குற்றாலம் வியாபாரிகள் சங்கமும் இக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.
இந்த நிலையில், பழைய குற்றாலம் அருவியில் குளிக்க வசூலிக்கப்பட்ட ரூ.20 கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு, அதன் பின்னர், கட்டணம் வசூலிக்கலாமா.? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.