தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்குத் தேவையான குடிநீர், வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப் படுகையிலிருந்து கொண்டு வரப்பட்டு, மாநகராட்சி மூலம் அனைத்து வார்டுகளுக்கும் சுழற்சி முறையில் முறையாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக கோடை வெயில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது.
பொதுமக்கள் குடிநீரை வீணாக்குவதை தவிர்க்கும் பொருட்டு தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா வழங்கியுள்ள பல்வேறு அறிவுறுத்தல்கள் பின்வருமாறு:
குடிநீர் விநியோகத்தின் போது பொதுமக்கள் தங்களது தேவைக்கு தண்ணீரைப் பிடித்தவுடன், உடனடியாகக் குடிநீர் குழாய்களை முறையாக மூடி வைக்க வேண்டும். குடிநீரைப் பயன்படுத்தி வாகனங்களைக் கழுவுவது, வீட்டுச் செல்லப் பிராணிகளைக் குளிப்பாட்டுவது மற்றும் வீட்டுத் தோட்டங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
குடிநீரை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தி, வீணாக்காமல் ஒத்துழைக்க வேண்டும். கோடை காலத்தில் மாநகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யப் பொதுமக்கள் இந்த வழிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு கமிஷனர் கேட்டுக்கொண்டுள்ளார்.