புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மெய்யப்பட்டியை சேர்ந்தவர் பிரபு(43). இவர், திருமயம் கடைவீதியில் பர்னிச்சர் என்ற கடை நடத்தி வந்தார். அவரது கடையில் கரூர் மாவட்டம் திட்டகுடியை சேர்ந்த அய்யாதுரை (28), குளித்தலை கார்த்திக் (30) ஆகியோர் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், சந்தைப்பேட்டையில் உள்ள பர்னிச்சர் குடோனில் நேற்று முன்தினம் இரவு பிரபு நின்று கொண்டிருந்தார். அப்போது அய்யாதுரையும், கார்த்திக்கும் அங்கு சென்று தங்களது சம்பள பாக்கி குறித்து பிரபுவிடம் கேட்டதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் அய்யாதுரையும், கார்த்திக்கும் தங்கள் கைகளில் அணிந்திருந்த காப்புகளால் பிரபுவை பலமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பிரபுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை தாக்கிய இருவரும் அங்கிருந்து தப்பியோடினர்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் பிரபுவை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரபு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திருமயம் போலீசார், தப்பியோடிய அய்யாதுரை மற்றும் கார்த்திக்கை தீவிரமாக தேடி வருகின்றனர்.